ஆசையாசையாய்ப் பெற்று, பாசமாய் வளர்த்து, தரமான கல்வி கொடுத்து, உயர்ந்த இடத்திற்குப் பெண்ணைக் கொண்டுசென்று நல்ல இடத்தில் மணம்முடிக்கக் காத்திருக்கும் பெற்றோரை ஏமாற்றிவிட்டு, தனக்குப் பிடித்த ஒரு ஆணுடன் சென்றுவிடும் பெண்ணை என்னவென்பது?
வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக தனக்கொரு பலம் எப்படி வந்ததென்பதை உணர்வதில்லை. கடைசிவரை இவன் தன்னைக் காப்பாற்றுவானா என்றும் பார்ப்பதில்லை. இனம், மதம் மாறினாலும் பெற்றோரின் சம்மதமின்றி ஓடிப்போக முயல்வது ஏன்? இதுபற்றிய ஒரு ஆய்வுதான் இந்தக் கட்டுரை.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 3, 7, 8-ஆமிடங்களை நன்கு கவனிப்பதோடு, ராகு- கேது, சனி, செவ்வாய், மாந்தி, சூரியன் போன்ற பாவ கிரகங்களின் இருப்பிட, சார ஆய்வுகளும் முக்கியம். லக்னாதிபதியின் பலம்- பலவீனம் எப்படி என்பதையும் ராசியின் தன்மை குறித்தும் குணரீதியாகப் பார்ப்பது நல்லது.
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் தேவை. அதேசமயம் அது தவறான செயலுக்குத் துணையாகிடாமல் கண்காணிக்க வேண்டும். படிக்கும்போது விளையாட்டில் ஆர்வம் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்று பதக்கம் வாங்கினால் பாராட்ட வேண்டியதுதான். அதேசமயம் வீட்டைவிட்டு ஒரு ஆணுடன் ஓடினால் அது வேதனையான விஷயமல்லவா?
சரி; இதை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கான சில விதிகளை ஆராய்வோம்.
ஒரு பெண் எந்த லக்னத்தில் அல்லது ராசியில் பிறந்தாலும் வளர்பிறை அஷ்டமி, பிரதமை திதிதிகளில் பிறந்திருந்தால் படிப்பைக் கொடுப்பதோடு, இதுபோன்ற தவறான சிந்தனைகளையும் ஏற்படுத்தும்.
பெரும்பாலும் ரிஷப லக்னம், ராசிகளில் பிறக்கும் பெண்கள் சுறுசுறுப்பு, திறமை, நிர்வாகம், சமைப்பதில் சுவை என இருக்கும்.
அதேசமயம் ஓயாத பேச்சு, அவசர முடிவு, எதிரில் இருப்பவரின் சொல்லுக்கு மதிப்பளிக்காமல் தான் சொல்லுவதே சரியென்று வாதிடுதல் போன்ற குணங்களைக் கொடுக்கும்.
லக்னமானது மிருகசீரிட நட்சத்திர சாரத்தில் இருக்கும்போது, சாராதிபதியான செவ்வாய் தனபாவமான மிதுனத்தில் நின்று, திருவாதிரை- அதாவது ராகு சாரம் வாங்கி, அந்த ராகு ஏழாமிடத்தில் இருப்பின் விரும்பியவனுடன் ஓடிப்போய்தான் வாழவைக்கும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
லக்னத்திற்கு இரண்டாமிடத்திலிருக்கும் ஒரு பாவகிரகம், ஏழாமிட பாவ கிரகம் சர ராசியிலிருந்து அதோடு சார தொடர்புகொண்டால் வீட்டைவிட்டு ஓடிடும் எண்ணத்தை ஏற்படுத்தும். லக்னம், ராசி ஒன்றாகி, அதனோடு ராகுவோ, கேதுவோ இணைந்தால் ஒரே சிந்தனையைக் கொடுக்காது. குழப்பிவிட்டுவிடும். தவறான முடிவுக்கு இழுத்துச்செல்லும். கண்டிப்புக்கு அடங்காது. முடிவைப் பற்றிக் கவலைப்படாது.
உதாரண ஜாதகத்துடன் மேலும் சில விதிகளைப் பார்ப்போம்.
பிறந்த தேதி: 1-3-1993, (மாசி-18) (பெண்).
பிறந்த இடம்: மைசூர்.
பிறந்த நேரம்: இரவு 12.40
சாரம் நின்ற விதம்
மிருகசீரிடம் 1-ல் லக்னம்.
சதயம் 4-ல் சூரியன்.
ரோகிணி 1-ல் சந்திரன்.
திருவாதிரை 3-ல் செவ்வாய்.
பூரட்டாதி 4-ல் புதன்(வ).
அஸ்தம் 3-ல் குரு(வ).
ரேவதி 3-ல் சுக்கிரன்.
அவிட்டம் 2-ல் சனி.
கேட்டை 3-ல் ராகு.
மிருகசீரிடம் 1-ல் கேது.
சந்திர தசை இருப்பு: 7 வருடம், 11 மாதம், 16 நாள்.
ராகு, அம்சம் இரண்டிலும் 1 ஷ் 7-ல் ராசி- கேது, தன பாவத்தில் செவ்வாய், சனி, அம்ச ஏழாமிடத்தில் ராகுவோடு செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை என பாவ கிரகங்களின் கூட்டணி.
மிருகசீரிடம் சாரத்தில் கேது சூரியனுக்கு எதிர்ப்பாகி சதயத்தில் நிற்க, குழப்பத்தை ஏற்படுத்தி குணத்தை மாற்றிவிட்டது.
லக்னாதிபதியும் ராசியாதிபதியும் 3-க்குடையவனும் பலம்பெற்றால் கடுமையான துணிச்சலைக் கொடுக்கும்.
தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று யோசிக்காமல் செய்ய வைக்கும். தன்னம்பிக்கை இருக்கவேண்டியதுதான்.
அதற்காக கெட்ட முடிவுக்கு அதிக தன்னம் பிக்கை ஆபத்தைக் கொடுக்குமல்லவா?
என்னதான் பெற்றோர் படிக்கப்போகும் பெண்களுக்கோ, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கோ கட்டுப்பாடுகளையும் கண்டிப்புகளையும் பாடமாக போதித்தாலும், இதுபோன்று கிரக அமைப்புகளிருப்பின் கிழித்த கோட்டைக் கடக்க வைத்துவிடும்.